ஸ்வர்ணம் தந்த பைரவர் :

நடராஜப் பெருமானின் கர்ப்பக் கிருகத்திலேயே சொர்ண கால பைரவரும் எழுந்தருளியுள்ளார். இந்த கால பைரவரின் திருவடியில் வைக்கப்படும் செப்புத் தகடு தங்கமாக சொர்ணமாக மாறுவதால் இவருக்கு சொர்ண கால பைரவர் என்று பெயர் ஏற்பட்டது. முதல் நாள் பூஜை முடிந்த பின்னர் இரவு நடை சாத்தப்படும் போது கால பைரவரின் திருவடியில் செப்புத் தகடு வைக்கப்படும். மறுநாள் பூஜை முறைக்கு உரிய அந்தணர் சிவநாமம் ஓதிக் கதவை திறக்கும் போது அத்தகடு பொன்னாக மாறி இருக்கும். தில்லை அம்பலத்தில் நடராஜப் பெருமானின் தங்கத் திருமேனி இருந்த வரையில் இந்த அற்புதம் நிகழ்ந்தது. பின்னர் களப்பிரர்கள் என்ற சமணர்களின் ஆட்சிக் காலத்தில் சிதம்பரம் பொற்கோவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுப் பொன்னெல்லாம் சூறையாடப்பட்டது. பல்லவர்கள் காலத்தில் புதிய கோவில் மீண்டும் கட்டப்பட்டு அம்பலம் பொன்மயமாக்கப்பட்ட பின்பும் பொன்னம்பலம் அந்நியர்களால் பலமுறை தாக்கப்பட்டது. நடராஜரின் திருமேனி ஐம்பொன் மேனியாக மாற்றப்பட்டதால் செம்பு பொன்னாகும் அதிசயம் நின்று போயிற்று என்கிறார்கள்.