சங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

ணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது. 
சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி.  சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
ஆண்டின்  ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே  அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர்.   சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான்.  பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். 
சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள  விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது.  மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய   சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.  தேய்பிறை  செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி,  நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம். 

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.
ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.
ப்ருகண்டிஎன அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.

தன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது.  வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம். 

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :